RSS

ஓடிக் கொண்டு…?

ஓடிக் கொண்டு இருக்கிறோம்…!

யாருமற்ற, அழகிய கடற்கரை…! நீ என் முன்னால் ஓடிக் கொண்டு இருக்கிறாய்…! நான் துரத்தியபடியே உன் பின்னால் வருகிறேன். என் வலக் கையை நீட்டுகிறேன், உன்னைப் பிடிப்பதற்காக…! உன் முதுகுக்கும் என் கைக்கும் இடையில் ஒரு 1/2 அடி தான் இருக்கும். நீ சிணுங்கி சிரித்தவாறே ஓடுகிறாய். நீ சிரிக்கும் சப்தம் கேட்பதாலோ என்னவோ வேறு எந்த சப்தமும் அங்கு கேட்கவில்லை. மிகவும் நிசப்தமாக இருக்கிறது. உன் சிரிப்பு சப்தமும் என் மூச்சுக்காற்று மட்டும் தான் எனக்கு கேட்கிறது…!


“ஏய் நில்லு, எங்க ஓடுற?” என்று கேட்கிறேன் புரியாமல். “அதோ அங்க தெரியுது பார், அந்த வீட்டையும் தாண்டி, அந்த சவுக்கு காட்டையும் தாண்டி, ரொம்ப தூரம்” என்கிறாய் ஓடிக்கொண்டே. “நாம இப்டியே… ஓடிப் போய்டலாமா?” என்றபடியே என் வேகத்தை அதிகப் படுத்துகிறேன். “அப்ப கூட நீ என்ன இழுத்து கிட்டு ஓடல, நான் தான் ஓடுறேன். நீ என்ன துரத்துற…” என்கிறாய் விவகாரமாய். “இந்தா, வந்து உன்ன பிடிச்சு என்ன பண்றேன் பாரு”, என்கிறேன் நானும் விடாப் பிடியாய்.


“ஹா ஹா ஹா ” என்று திரும்பிப் பார்த்து சிரித்துக் கொண்டே “ஒன்னால முடியாது என்னப் பிடிக்க” என்று சொல்லியவாறே குனிந்து தண்ணீரை அள்ளி என் மீது தெளிக்கிறாய். அது சரியாக என் முகத்திலே அறைந்தது. வியர்வையின் உப்புக் கரிப்பை விட… கடல் நீர் உப்புக் கரிப்பு அதிகமாய் தெரிய, லேசான கோபத்துடன், நானும் குனிந்து தண்ணீரை அள்ளி உன் மீது தெளிக்கிறேன், அது ஏனோ, நான் எதிர் பார்த்த அளவு உன் மீது படவில்லை. கீழே தான் விழுந்தது. நானும் வேகத்தை அதிகரித்தேன். எனக்கு மூச்சிரைப்பு அதிகமாகிறது, ஓட முடியவில்லை, வியர்க்க ஆரம்பித்து விட்டது.


வயிறு தரையில் முட்டி உடல் வலிக்க ஆரம்பித்து விட்டது… முடியாமல் புரண்டு மல்லாக்கப் படுக்கிறேன். நினைவு திரும்புகிறது. இரவு நேரம், கரண்ட் போய்விட்டது வீட்டில், நன்றாக வியர்த்து விட்டது. மூச்சு பயங்கரமாக இரைக்கிறது. எழுந்து தண்ணீர் குடித்து விட்டு, மறுபடியும் படுத்து நெற்றியில் இருக்கும் வியர்வையை துடைத்த படியே நம்மைப் பற்றி நினைக்கிறேன். ஆமாம், நாம் எங்கோ தெரியாத இடத்துக்கு தான் ஓடிக் கொண்டு இருக்கிறோம், வேறு வேறு பாதையில். கனவிலாவது ஒன்றாக ஓடிக் கொண்டு இருக்கிறோமே?

 

3 responses to “ஓடிக் கொண்டு…?

  1. balaji's avatar

    balaji

    March 6, 2012 at 10:52 AM

    y boss y ipadi

     
  2. Karthik's avatar

    Karthik

    June 28, 2012 at 3:54 PM

    why this kolaveri

     
  3. Karthik's avatar

    Karthik

    June 28, 2012 at 3:56 PM

    Boss y can’t u try for lyrics writing in Goutham film or in mani rathinam movie ?

     

Leave a reply to Karthik Cancel reply