நீ வருவாய் என…!
நீ வருவாய் என…!
நகரத்தின் பிடியில் சிக்கி வழி தெரியாமல், வலி வந்தால் கூட அழாமல், விழி பிதுங்கிப் போய், கணினியே கதி என்று கடனாய் கிடக்கும் ஓராயிரம் இளைஞர்களில் நானும் ஒருவன். சிற்சில நேரங்களில் உனது நினைவே சிறந்தது என்று தனிமையில் இருக்க விரும்பி கடற்கரையில் வெய்யில் என்று கூட பாராமல், முழு நாளும் மணலில் கிடந்தது கரைந்தது உண்டு. உன்னுடன் நாடித் திரிந்த பொழுதுகளும், நகைத்துப் பழகிய தருணங்களும் மறக்க முடியாமல் நான் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சம் அல்ல. அது ஏனோ தெரியவில்லை 4 ஆண்டுகள் கடந்த பின்னரும், நீ அதே புன்னகை மாறாமல் கனவில் வந்து போய்க்கொண்டு இருக்கிறாய். ஒரு வேளை உனக்கும் இதே மாதிரி நான் கனவுகளில் வந்து போகிறேனா என்று தெரியவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்னால் கடைசியாக பார்த்த உன் முகத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன், மீண்டும் பார்க்கும் சந்தர்ப்பம் இது வரை கிடைக்கவே இல்லை.
இப்போது கூட நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் நண்பன் ஒருவன் திருமணத்திற்கு வந்து இருக்கிறேன். ஒரு வேளை நீயும் வரக் கூடும் என நினைக்கிறேன். வந்தால் உன்னை பார்க்க நேரிடலாம். உன் பார்வையை தவிர்த்து விட வேண்டும் என்கிற எண்ணத்துடன் தான் வந்து இருக்கிறேன். ஆனால் என்னவோ தெரியவில்லை, என் கண்கள் அறிவிற்கு கட்டுப்படாமல், மனதிற்கு கட்டுப்பட்டதாய், வந்ததில் இருந்து உன்னைத் தான் தேடிக்கொண்டு இருக்கிறது. நானும் எங்கெங்கு தேடியும் உன்னைக் காணமுடியவில்லை. நண்பர்களிடமும் உன்னைப்பற்றி விசாரிக்க மனமில்லை. இரண்டு மணி நேர தேடலுக்குப் பின்னர் நீ வரவே இல்லை என முடிவெடுத்தேன். மறுபடியும் என் வாழ்க்கை ஒரு வெற்றிடத்தில் இருந்து ஆரம்பிப்பது போன்ற உணர்வு மேலிடத் துவங்கியது. எதிலும் விருப்பமில்லை, போலியான புன்னகைகள், விசாரிப்புகள் என்று எல்லாம் நாடகத் தனமாய் தெரிந்தது.
ஆனால் மறுபக்கம் திருமணம் மிகவும் நன்றாக முடிந்தது.”சரிடா மச்சி, சாப்ட போலாம் வா… ” என்று நண்பர்கள் அழைத்தனர். விருப்பமில்லாமல் கிளம்ப ஆயத்தமானேன். Cell Phone இல் ஒரு SMS வந்து இருந்தது. ஒரு வேளை நீயாக இருக்குமோ என்று சிறிதான ஏக்கத்துடன் எடுத்துப் பார்த்தேன். ஒரு Marketing SMS வந்து இருந்தது. மீண்டும் ஏமாற்றத்துடன் எழுந்து செல்ல எத்தனித்தேன். உன்னுடன் உண்டான தோல்விக்குப் பின்னர், நான் சந்திக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் நீ இருக்க மாட்டாயா என்கிற ஏக்கத்துடனே வாழவேண்டி இருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஏமாறும் போது வாழ்வின் மீது வெறுப்பு உண்டாவதை தவிர்க்க முடியவில்லை. ஏமாற்றங்கள் பழகிப் போன வாழ்வில் இந்த SMS எல்லாம் ஒரு விஷயமா என்று மனதை தேற்றிக் கொண்டு நடக்க ஆரம்பிக்கும் போது நீ எதிரே வருகிறாய்.
பயம், வெட்கம், பரபப்பு, கூச்சம், மகிழ்ச்சி, அழுகை, சிலிர்ப்பு என எல்லா உணர்ச்சிகளும் ஒரு சேர வந்தது போல ஒரு உணர்வு. உடலில் எனக்கு ஏற்பட்ட வேதி மாற்றங்களை என்னால் முழுதாய் விவரிக்க முடியவில்லை. AC ஹாலில் எங்கிருந்து தான் வியர்வை வந்து அப்பிக் கொண்டதோ தெரியவில்லை, உடனே சிலிர்த்து வியர்த்து விட்டது. வாய் திறந்து பேச முடியவில்லை. தொண்டையில் தண்ணீர் வறண்டு விட்டது போல் ஒரு உணர்வு. இதயத்தை துடிக்க விடாமல் யாரோ அழுத்தி பிடித்து இருப்பது போலவும் இருக்கிறது. என்னால் முழுதாய் உன்னைப் பார்க்க முடியவில்லை. உன் கண்ணை விட்டு வேறு பக்கம் பார்க்கவும் முடியவில்லை.
ஆனால் உன் முகத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. ஒரு விநாடி பார்த்தாய், பின்னர் முன் பின் பார்க்காத ஒரு ஆளை பார்த்தது போல சென்று விட்டாய். உன்னிடம் எந்த சலனமும் எற்பட்டதாய் தெரியவில்லை. மிகவும் சாதரணமாய் நடந்து சென்றாய். ஆனால் என்னால் அங்கு நிற்க கூட முடியவில்லை. கை கால்கள் வெல வெலத்துப் போய்விட்டது. வேகமாக மண்டபத்தை விட்டு வெளியே வந்தேன். என்னுள்ளே ஓராயிரம் கேள்விகள் எழுந்தன. என்னால் உன்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை. முன்னெல்லாம் தினமும் பேசி விட்டு பிரிந்து செல்லும் போது ஒவ்வொரு நாளும் அழுவாய். சனி ஞாயிறுகளில் என்னை பார்க்க முடியவில்லை என்று Phone இல் அழுவாய். ஆனால் இப்போது ஒரு சாதாரண சாமானியனை பார்ப்பது போல பார்த்து செல்கிறாய். என்ன ஆயிற்று உனக்கு? என்னை முழுதாய் மறந்துவிட்டாயா? இல்லை அந்த ஒரு நொடிப் பார்வையில் என்ன சொல்ல வந்தாய்?, என் மீது ஏதும் கோபம் உண்டா?, ஏன் உடனே சென்றுவிட்டாய்?, ஏன் என் கூட பேசவில்லை?, என்னைப் பார்க்க பிடிக்கவில்லையா? இன்னும் என்னென்னவோ கேட்க வேண்டும் போல் இருந்தது. நீ என்னை ஒதுக்கித் தள்ளியது போல் இருந்தது. உலகமே எனக்கு எதிராய் நிற்பது போலவும் தனி ஆளாய் நான் மட்டும் நின்று அழுது கொண்டு இருப்பது போலவும் தோன்றியது.
எனக்கு திரும்ப மண்டபத்திற்குள் வர விருப்பமில்லை. நண்பர்கள் Phone பண்ணினார்கள் “எங்கடா போய் தொலைஞ்ச?… சீக்கிரம் வாடா இங்க செம கூட்டமா இருக்கு” என்று கடு கடுத்தார்கள். எனக்கு சாப்பிடுவதில் இஷ்டம் இல்லை. “நான் வெளில நிக்கிறேன், எனக்கு பசிக்கலடா… நீங்க சாப்ட்டு வந்து சொல்லுங்க, நான் அப்புறமா உள்ளே வரேன்”, என்று கூறினேன். சிறிது நேரம் செய்வதறியாது வெளியில் நின்றேன். மனதின் ஒரு புறம் உள்ளே வந்து உன்னுடன் “ஏன் என்னிடம் பேச மாட்டேன்கிறாய்?” என்று கோபப் பட்டு பேசவும் எண்ணம் வருகிறது. மறு பக்கம் “வேண்டாம்… அவளைப் பார்க்க போகாதே, அவள் உன்னை கண்டு கொள்ளவே இல்லை, இப்படியே சென்றுவிடு” என்றும் அறிவுறுத்திக் கொண்டு இருந்தது. கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது, கண்ணீரை கட்டுப் படுத்தி ஒரு 10 நிமிடம் அப்படியே வெய்யிலில் நின்று கொண்டிருந்தேன்.
மறுபடியும் நண்பர்கள் Phone செய்து அவர்கள் சாப்பிட்டு விட்டதாய் கூறி என்னை உள்ளே அழைத்தார்கள். நானும் உள்ளே வந்தேன். இந்த பாழாய்ப் போன கண்கள் உள்ளே வந்ததும் உன்னை தான் மறுபடியும் தேடுகின்றன. ஆனால் என் நண்பர்கள் தான் தென்பட்டார்கள், உன்னைக் காண முடியவில்லை. சரி என்று அவர்கள் பக்கம் மெதுவாக நடந்தேன். உன்னை மறுபடியும் பார்த்தால் என்ன செய்வது என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டே நடந்து வந்தேன். ஆனால் நீ பின்னால் இருந்து வந்து என்னை முந்திச் சென்றாய். உன்னைப் பார்த்த மறு நொடி மறுபடியும் நான் ஆடிப் போனேன். நீ என்னை முந்திச்செல்லும் முன், நான் மட்டும் கவனிக்குமாறு ஒரு காகிதத் துண்டை என்னருகில் விட்டுச் சென்றாய். கண்டிப்பாய் தெரியும் அது எனக்காக நீ எழுதியது என்று. நீ செல்லும் வரை உன்னையே கவனித்துக் கொண்டு இருந்தேன். நீ சென்றதும், கீழே குனிந்து எடுத்துப் பிரித்தேன். கை எழுத்து உன்னுடையது தான் என்று தெரிந்தது. படிக்க ஆரம்பித்தேன். இரண்டே வரிகள் தான் எழுதி இருந்தாய்.
“காதல் தோல்வியில் ஆண்களாக இருந்தால், தண்ணி அடித்தோ, தாடி வளர்த்தோ, நண்பர்களிடம் புலம்பியோ தன் வேதனையை ஆற்றிக் கொள்ளலாம். ஆனால் யாருமற்ற இரவில், ஜன்னலின் வழியாகத் தெரியும் நிலவைப் பார்த்து அழுவதை தவிர பெண்ணாய்ப் பிறந்த என்னால் வேறு என்ன செய்ய முடியும்…!”
N.K. Balaji
July 11, 2012 at 3:08 PM
Awesome…! Shafeeq. No words to express the goodness of the Narration and of the Story. Worth reading atleast 10 times. Can make ur readers gloom with joy and sadness simultaneously.
Miga Miga Nandru, Pathirigaikkalukku anupungul, Nalla ethir Kaalam irudkirathu, Vaazhthukkal.
Balaji. S
July 17, 2012 at 3:31 PM
Simply amazing… Pala peroda anubavam poliruku…
Anas
July 19, 2012 at 12:27 PM
Maple nee engayooo poita!!!!
Ebe
July 20, 2012 at 12:01 PM
Super Shafee… Nicely drafted painted with real feelings…
ebinezar
July 20, 2012 at 12:02 PM
Super Shafee. Nicely drafted, coated with real feelings…
Amuthan
July 20, 2012 at 2:22 PM
super thala 🙂 !! as usual,this also superb !!!
Syed Abuthahir
July 25, 2012 at 3:39 PM
அருமையான வடிவத்தை, இழந்த காதலுக்கு, நீங்கள் கூறிய உவமை வியப்பிர்கூரியது.
lukman
August 2, 2012 at 3:56 PM
boss ithan love story final touch superb
ummu jaafi
June 26, 2015 at 7:42 PM
தோல்வியுற்ற பெண் நிலாக்காலத்தில் மட்டும் தான் அழுவாளா!?.
சதீஷ் முருகன்
March 16, 2016 at 11:42 PM
தல, செம்ம… நடைமுறையில் ஆணே உணர்ச்சியை வெளிக்காட்டுபவன், பெண் தன் உணர்ச்சியை வெளிக்காட்ட முடியாது கட்டுப்படுத்த பட்டவள் – குடும்ப மானம் ஏதோ பெண்ணுக்கு மட்டுமானது என்ற தரம்கெட்ட கலாச்சார கொள்கை!!!