RSS

கடிதம்

காதல் கடிதம்

“என்னடா மாப்ள…! இன்னும் உன் ஆள காணோம்?” இது என் நண்பன், உன்னைப் பற்றி தான் கேட்கிறான். என்னுடைய A-Z எல்லா விஷயங்களும் அறிந்தவன். “இருடா… வந்துடும், கொஞ்ச நேரம் wait பண்ணலாம், இந்த வழியா தான போகணும்” இது நான். “டே இன்னைக்கு தான்டா last நாளு, இன்னைக்காவது கையில குடுத்துடு டா… நேத்து மாதிரி கீழ விழுந்து, அப்புறம் அந்த புள்ள எடுக்காம போயிட போகுது…”. நண்பர்களின் காதலர்களுக்கு உண்டான அறிவுரைகள், எப்போதுமே காதலை பலப் படுத்தும் விதமாகவே இருக்கும். ஆமாம், நேற்று நானும் அவனும் உட்கார்ந்து உனக்காக ஒரு கடிதம் எழுதி வந்தோம். ஆனால் என்னால் உன் கையில் கொடுக்க முடிய வில்லை. கடிதத்தை உன் கண்ணுக்குத் தெரியும் படி கீழே போட்டு விட்டு வந்துவிட்டேன், நீ எடுக்கவில்லை. சென்று விட்டாய்.


கடந்த ஒரு மாத காலமாக இதே பாதையில் வந்து நிற்கிறோம். நீ சென்றதும் திரும்பி சென்று விடுகிறோம். கடந்த ஒரு வாரமாக ஒரு சில முன்னேற்றங்கள் தெரிந்தது. அதன் விளைவாக கடிதம் எழுதும் அளவுக்கு துணிச்சல் வந்துவிட்டது. இன்றோடு இன்னும் ஒரு மாத காலம் உன்னைப் பார்க்க முடியாது. Semester Leave. இன்று எனக்கு நிறைய அறிவுரைகளும், நிறைய தைரியத்தையும் தந்து என்னை ஒரு வழியாக தேற்றிவிட்டு, என் பின்னால் நிற்கிறான் என் நண்பன். இன்றும் அதே கடிதத்தை வேறு ஒரு புது தாளில் எழுதிக் கொண்டு வந்து இருக்கிறேன். ஒவ்வொரு 30 நொடிகளுக்கு ஒரு முறை நீ வரும் பாதை நோக்கிப் பார்க்கிறேன், உன் வருகை தெரியவே இல்லை.


சில பல நிமிடத் துளிகளுக்குப் பின்னர் உன் தலை தெரிந்தது. உனக்குப் பின்னால் உன் தோழி இருவரின் தலைகளும் தெரிந்தது . உன்னைப் பார்த்த நொடி முதல்… எனக்கு கை கால் பதற ஆரம்பிக்கிறது. “ஆண்டவா இன்னைக்கு எப்டியாவது கையில கொடுத்துடணும்” மனதுக்குள் நான் வேண்டுகிறேன். நீயும் உனது தோழிகளும் நெருங்கி வருகிறீர்கள். எனக்கு இதயத் துடிப்பு வேகம் எடுக்க ஆரம்பிக்கிறது. உன் தோழி உன் காதில் ஏதோ ஊதுகிறாள். கண்டிப்பாய், அது “ஏய் இன்னைக்கும் வந்துட்டாய்ங்கடி” என்று தான் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தது. நான் உன்னைப் பார்க்காதது போல கீழே தரையைப் பார்க்கிறேன். “மாப்ள கீழ பாக்காத…அந்த புள்ளய பாருடா.. உன்னைத்தாண்டா பாக்குது…” இது என் நண்பன். நீயும், உன் தோழிகளும் நாங்கள் இருக்கும் இடம் நெருங்கி வருகிறீர்கள். இதயம் Jet வேகத்தில் துடிக்க ஆரம்பிக்கிறது.


உன் முகம் நன்றாகத் தெரிய ஆரம்பிக்கிறது, பயத்தில் நீ என்னைக் கவனிக்காதவாறு வேறு பக்கம் பார்க்க எத்தனிக்கிறாய். முடியாமல் என்னை மறுபடியும் பார்க்கிறாய். எனக்கு உள்ளூர ஏதோ சொல்லமுடியாதவாறு ஒரு உணர்வு மேலிட்டு சிலிர்க்கிறது. உனது கண்களில் பயம் தெரிகிறது, ஆனால், உதடுகளில் உள்ள வெட்கப் புன்னகை, கண்களில் உள்ள பயத்தை, மூடி மறைக்க முயல்கிறது. உன் கன்னம் வெட்கத்தால் சிவப்பதையும் என்னால் பார்க்க முடிந்தது. என்னை பின்னால் இருந்து “போடா…!” என்று தள்ளுகிறான் என் நண்பன். நீ அதைப் பார்த்து அதிகமாய் சிரிக்க முடியாமல் பெரிதாய் புன்னகைக்கிறாய். எனக்குள் ஒரு உத்வேகம் பிறக்கிறது, என்னை ஏதோ ஒன்று உந்த, நான் மெல்ல உங்களை நோக்கி வருகிறேன். அந்த இரண்டு அல்லக்கைகளும் இரண்டு அடி பின்னால் போகிறார்கள்.


உன்னுள் உள்ள பயமும் வெட்கமும் போட்ட எல்லைக் கோட்டைத் தாண்டி, காதல் வெளியேறத் துடித்துக் கொண்டு இருக்க…, வெட்கமில்லா என்னுள், பயம் போட்ட எல்லைக் கோட்டை என்றோ தாண்டிவிட்ட காதல் உனக்கு கடிதத்தை நீட்டத் தூண்டிய மறு பொழுது, நான் கடிதத்தை எடுத்து நீட்டுகின்றேன். நீ அதை வாங்காமல் செல்ல முயல்கிறாய். கடிதம் வாங்குவதற்கு கையை நீட்டவில்லை. ஒரு அடி வேகமாக நடக்கிறாய். அதுவரை இல்லாத பயம் என்னை முழுவதுமாய் ஆட்கொள்ள எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. என் நண்பனை ஒரு தடவை பார்க்கிறேன், அவன் கொடுடா, என்றவாறு சைகை செய்கிறான். இன்னும் ஓரிரு மாதங்களுக்கு உன்னைப் பார்க்க முடியாது, இது தான் கொடுப்பதற்கு என்று அவன் சொன்ன மிக மிக முக்கியாமான அறிவுரை ஞாபகத்துக்கு வர, நானும் உன்னருகே வேகமாக வந்து உன்னுடன் நடக்கிறேன்.


மறுபடியும் நீட்டுகிறேன். நீ இப்போதும் வாங்கவில்லை. உன் உதடுகளில் உள்ள புன்னகையை மாற்றாமல், தலையை மட்டும் முடியாதென்று ஆட்டுகிறாய். எனக்கு நன்றாகப் புரிந்து விட்டது, உன்னுள்ளும் காதல் அந்த எல்லைக் கோட்டை தாண்டி வர ஆரம்பித்து விட்டது என்று. நானும் சிரித்துக் கொண்டே, உன் கையில் உள்ள Long Size note ஐ வாங்கி கடிதத்தை அதனுள் வைத்து உன் கையில் கொடுக்கிறேன். அந்த ஒரு நொடியில், உன் கண்களும், முகமும் போட்ட கோலத்தை, நான் நன்றாக ரசித்து பார்த்து உன் காதலை முதன் முதலாய் உணர்ந்தேன். நீ சிரித்துக் கொண்டே வேகமாய் நடக்கிறாய். உன் பின்னால் வந்த அல்லக்கைகள் என்னையும், என் நண்பனையும் பார்த்து முறைத்துப் பார்க்கின்றனர். அதனைப் பெரிதாய் பொருட்படுத்தாத நானும் என் காதல் குருவும் நாங்கள் வந்த Cycle ஐ எடுக்க செல்கிறோம். நான் நொடிக்கு இரு முறை உன்னை திரும்பிப் பார்த்துக்கொண்டே செல்கிறேன், நீ திரும்பவே இல்லை, கடைசியாய், நீ வளைந்து செல்வதற்கு முன்னதாய் திரும்பி என்னைப் பார்த்து சிரிக்கிறாய். மனம் என்றும் உணர்ந்திடாத ஒரு நிம்மதியை அடைந்து இருந்தது.

 

4 responses to “கடிதம்

  1. Anas Ahamed's avatar

    Anas Ahamed

    September 20, 2011 at 11:54 AM

    Awesome da machi!!!! keep posting!!!! enakku ennomo nee remba feel pannura mathiri theriyuthu!!!!

     
  2. sitthi's avatar

    sitthi

    November 16, 2011 at 12:07 PM

    nice feeeeling jiiiiiiiii

     
  3. சக்தி's avatar

    சக்தி

    December 21, 2011 at 9:44 PM

    ஹ்ம், எல்லாருடைய வாழ்க்கையிலும் இந்த சீன் கண்டிப்பா உண்டு, அருமை… 🙂

     
  4. M.lukman's avatar

    M.lukman

    June 20, 2012 at 3:50 PM

    thalaiva sema next kathal kottai, kathaluku mariyathai

     

Leave a reply to M.lukman Cancel reply