RSS

மதிய நேரத்து ரயில்

மதிய நேரத்து ரயில்

கூட்டம் அதிகமில்லாத, மதிய நேர மின்சார ரயில், நானும் அதனுள் அமர்ந்து சென்று கொண்டு இருக்கிறேன். அந்த பெட்டியில் மொத்தமே ஒரு ஐந்தாறு பேர் தான் இருந்தோம். என் அருகிலோ, எதிரிலோ யாரும் இல்லை. பக்கவாட்டில் இருந்த அடுத்த இருக்கையில் ஒரு 40 வயது மதிக்கத் தக்க ஒருவர் இருந்தார். கண்டிப்பாய் என்னால் கூற முடியும், அவர் அரசு அலுவலகத்தில், மாத சம்பளம் வாங்கி குடும்பத்தை ஒட்டிக் கொண்டு இருப்பவராகத்தான் இருக்க முடியும். வயதிற்கேற்ப முதிர்ச்சி, கண்ணாடி, தொப்பை, insert செய்த சட்டை என்று அந்த வயதிற்குரிய அனைத்து அம்சங்களும் அவரிடத்தில் இருந்தது. யாரும் யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. ரயில் வேகமாக சென்றாலும் ஒரு அமைதியான உணர்வை உணர்ந்தேன்.


ரயில் ஒரு station இல் நின்றது, ஒருவர் மட்டும் இறங்கினார், யாரும் ஏறவில்லை. நான் வாசலையே பார்த்துக் கொண்டு இருந்தேன். ரயில் எடுப்பதற்குண்டான அறிகுறி, அதன் மணியோசையில் தெரிந்தது. திடீரென்று மின்னலென ஓடி வந்து ஒரு அழகு தேவதை உள்ளே ஏறினாள். ரயில் தன் கடமையில் கருத்தாய் மறுபடியும் வேகமாக ஓட ஆரம்பித்தது. அவள் என்னைப் பார்த்தாள், நேராக என்னை நோக்கி நடந்து வந்தாள். நான் அவள் பக்கம் இருந்த என் பார்வையை எடுத்து, ஜன்னலின் பக்கமாக பார்க்க ஆரம்பித்தேன். என்ன ஆச்சரியம், அவள் நேராக நடந்து வந்து என் அருகில் இடைவெளி இன்றி அமர்ந்தாள். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. எதிரிலே இடம் காலியாக இருந்தது, பின் சீட்டும் காலியாக தான் இருந்தது. நான் திரும்பி அவளை பார்க்கலாமா? வேண்டாமா? என யோசித்துக்கொண்டே, பார்வையை லேசாக அவள் பக்கம் திருப்பினேன். அவளிடம் எந்தச் சலனமும் இல்லை. அந்த பெட்டியில் யாருமே அவள் என் அருகில், அமர்ந்ததை பெரிதாய் கவனிக்கவில்லை.


அடுத்த வரிசை பெரியவர் மட்டும் ஒரே ஒரு தடவை பார்த்தார், என்ன நடக்கின்றது என்று. நான் ஏதோ ஒரு அமைதியின்மையை உணர்ந்தேன். அவள் பக்கம் திரும்பி, “Excuse me, எதிர்த்தாப்ல seat free யா தான இருக்கு, அங்க உக்காருங்களேன்?” என்று கேட்க எத்தனித்து, “Excuse me…..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவள் திரும்பி ” செருப்பு பிஞ்சிடும், உங்க வேலைய மட்டும் பாருங்க…” என்றாள் உரக்க. இம்முறை எல்லோர் தலையிலும் அசைவைக் கண்டேன். எல்லோரும் திரும்பி என்னைப் பாத்தனர். அந்தப் பெரியவர் நான் ஏதோ தவறு செய்ததை போல என்னை சந்தேகப் பார்வை பார்த்தார். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.


உடனே எழுந்து எதிர்த்த இருக்கையில் அமர்ந்து, அவள் பக்கம் பார்க்காமல், வேறு பக்கமாக பார்த்துக் கொண்டு வந்தேன். அவள் என்னையே பார்த்துக் கொண்டு வந்தாள். கொஞ்ச நேரம் கழித்து லேசாக அவள் பக்கம் திரும்பினேன். அப்போதும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். பார்வையில் கோபம் தெரிந்தது. பெண்கள் கோபப்பட்டால், அழகாக இருப்பார்கள் என்று சொல்வார்கள், அன்று தான் நேராய்ப் பார்த்தேன். மிகவும் அழகாக இருந்தாள், கோபத்தில். ஆனால் என்னால் ரசிக்க முடியவில்லை, திரும்பி விட்டேன். நான் திரும்பியதும் அவள் மிகவும் கோபப்பட்டு, “உனக்குலாம் அறிவே கிடையாதா?” என்று ஆரம்பித்து திட்ட ஆரம்பித்து கன்னா பின்னா வென சத்தம் போட்டு திட்ட ஆரம்பித்து விட்டாள், எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல், அவளை சட்டை செய்யாதது போல எழுந்தேன்.


திடீரென்று மண்டையில் அடி விழுந்தது, அவள் தான் அடித்தது. வலிக்கவில்லை, ஆனாலும் கோபம் வந்தது. ஆனால் என் கோபத்தை விட அவள் கோபம் மிகவும் அதிகமாக இருக்கிறது. “எவ்வளவு Phone பண்ணாலும், எடுக்க மாடியா? அப்டி என்ன வேலை உனக்கு? என்னைய விட அந்த வேலை தான் உனக்கு பெரிசா போச்சா? நாலு நாளா try பண்ணிட்டு இருக்கேன், Phone attend பண்ணவே இல்ல நீ. உனக்குலாம் எதுக்கு Lover, நேத்து meet பண்ணலாம்னு சொல்லி இருந்தீலடா நீ? நானும் வந்து Phone மேல Phone பண்றேன், எடுக்கவே இல்ல நீ”. “இல்ல நான்….” என்று நான் பேச ஆரம்பிக்கும் முன் “நீ பேசாத… ” என்று என்னை நிறுத்தி, முழுவதுமாக கொட்டித் தீர்த்தாள்.


அவள் சொல்வது உண்மை தான், நான்கு நாட்களாக அலுவலகத்தில் ஓய்வில்லாத வேலை. அவளது அலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை. பொதுவாகவே, பெண்களைக் கோபப்படுத்திப் பார்ப்பதில் ஆண்களுக்கு ஒரு இன்பம். நானும் அதில் விதிவிலக்கல்ல. எங்களது station வந்தது. இருவரும் இறங்க ஆயத்தமானோம். அவளது கைப்பையை எடுத்துக் கொடுக்க அதன் மேல் கை வைத்தேன். “எனக்கு எடுக்கத் தெரியும்” என்று வெடுக்கென்று, எடுத்து வேகமாய் இறங்கினாள். “ஏய், நில்லு… ” என்று நானும் அவள் பின்னே இறங்க சென்றேன். அப்போது அந்தப் பெரியவர், எங்களை ஒரு புழுப் பூச்சியை பார்த்ததை நான் அவரைப் பார்க்காமலே உணர்ந்தேன்.


ஒரு பக்கம் இவளின் கோபம், மறு பக்கம் அந்த பெரியவரின் சந்தேகப் பார்வை. என்னால் இவளுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்க முடிந்தது. இதே போல தான், வாழ்க்கையில் எல்லோராலும் எல்லோரையும் எப்போதும் திருப்திப் படுத்த முடியவே முடியாது….!

 

4 responses to “மதிய நேரத்து ரயில்

  1. Riyas Jumeira's avatar

    Riyas Jumeira

    August 15, 2011 at 8:13 AM

    எல்லோரையும் எப்போதும் திருப்திப் படுத்த முடியவே முடியாது

    nice sentence……………………..

     
  2. ebinezarzar's avatar

    ebinezarzar

    September 12, 2011 at 10:39 AM

    Nice one.

     
  3. arun's avatar

    arun

    October 19, 2011 at 10:01 AM

    avloo busy ah namma officle veela paatheenga la… namba mudilaya boss!!!!!

     
  4. sitthi's avatar

    sitthi

    November 16, 2011 at 11:54 AM

    neenga oru markamathan poreeenga jiiii

     

Leave a reply to sitthi Cancel reply