ரெட்டை வாலு
ரெட்டை வாலு…!
இதோ என் அருகில், எனக்கு முதுகைக் காட்டியவாறு ஒருக்களித்து படுத்துக் கிடக்கிறாய். நான் உன்னை நெருங்கி வருகிறேன், வந்து உன் கன்னத்துக்கும் தோளுக்குமான இடைவெளியில் என் தலையை வைத்து, என்னுடைய தாடையால், உன் தோளை அழுத்துகிறேன். நீ எதுவும் கூறவில்லை, உன் காது ஜிமிக்கி என் கன்னத்தை பதம் பார்த்துக் கொண்டு இருந்தது. கைகளினால், உன் ஜிமிக்கியை, தள்ளி வைத்து என் கன்னத்தை அழுத்தாதவாறு வேறு பக்கமாக வைக்கிறேன். நீ சிணுங்கியவாறே “சும்மா இருடா ரெட்டை வாலு” என்கிறாய்.
“யாரு நானா… இல்ல நீயா?, நீதான், உனக்கு தான் ரெண்டு வாலு தலைல முளைச்சு இருக்கு, இந்த காலத்துல கூட, உன்ன மாதிரி ஆள்களால தான், ரெட்டை ஜடைலாம் போட முடியும்” என்கிறேன் கிண்டலாக. “போடா லூசு” என்கிறாய் செல்லக் கோபமாக. நான் மறுபடியும் என் கையை எடுத்து, உனக்கு வலிக்காதவாறு, உன் காதைப் பிடித்து இழுத்துவிடுகிறேன். உனக்கு வலிக்கவில்லை, இருந்தாலும், “ஆ…!” என்று கத்துகிறாய்.”ஏய்… ஏண்டி கத்துற… இப்போ என்ன பண்ணாங்க உன்னய?” இது நான். “இப்டியே பண்ணிட்டு இருந்தீனா, நான் போயிருவேன்” என்கிறாய் கோபமாக. இந்தமுறை செல்லமாக இல்லை, உண்மையிலேயே கொஞ்சம் கோபம் தெரிந்தது.
“போடி… யாரு உன்ன வச்சுக்கிட்டாங்க?” என்கிறேன். உன்னிடம் உடனடி பதில் ஏதும் இல்லை, இரு நொடிகளுக்குப் பின்னர், திரும்பி என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே, என் இடது கையின் உள்ளங்கையை எடுத்து உன் முகத்தின் பக்கம் வைத்து, உன் வலக் கையின் ரேகையுடன் ஒப்பிடுகிறாய். நான் அதற்கு வெகு நேரம் அவகாசம் கொடுக்காமல், அந்த கையை வைத்தே, உன்னை என்னுள் இறுக்குகிறேன். நீ சிரிக்கும் சப்தம் கேட்கிறது. தலையணையின், நாற்றம் அடித்து நிகழ்காலத்தின் உலகத்திற்கு திரும்பியவனாக தூக்கம் வராமல், மறுபடியும் புரண்டு படுக்கிறேன். தூக்கம் வரவில்லை. தலையணையை மறுபடியும் அணைக்க மனமில்லாமல் படுத்து உறங்க முயற்சிக்கிறேன்…!
MdRabeek
October 18, 2011 at 11:37 AM
தூக்கம் வராமல் எப்படி மச்சி கனவு மட்டும் வந்தது ?, என்னமோ நடக்குது….
M.lukman
June 20, 2012 at 3:53 PM
ithu kanavu ila ninaivu