RSS

ரசித்தல்

நீ கொடுத்த கவிதைகளில், மிகவும் முக்கியமானது, என்னால் மறக்க முடியாததும் கூட.
“என்னை அதிகமாக ரசித்ததும் நீ தான்…
என்னை அதிகமாக ரசிக்க வைத்ததும் நீ தான்..!”

ஒரு காதலி தன் காதலனுக்கு இதை விட அதிகமாய் காதலை உணர்த்தும் படியான வேறு ஒரு கவிதையை நான் படித்ததில்லை.


உடனே நான் கேட்டேன், “என்னிடத்தில் அப்படி நீ எதை ரசித்தாய், நான் அப்படி என்ன ரசிக்க வைத்து விட்டேன்…” என்று புரியாமல். அதற்கு நீ கூறிய அழகான பதில். “நீ என்னிடத்தில் எதைப் பற்றியாவது மிகவும் serious ஆக பேசிக்கொண்டு இருப்பாய். நான் உன்னை என் கண்கள் அகல பார்த்துக் கொண்டிருப்பேன். அப்போது ஒவ்வொரு வார்த்தைக்கும் இடையில், நீ உன் கண்களை சுருக்கிக் கொண்டு, என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டு ‘அத எப்டி சொல்லலாம்?’ என்று கேட்டுக் கொண்டே மனதிற்குள் யோசித்து அழகாய் விவரிப்பாய், உன் கைகள் காற்றில் உன் பேச்சுக்கு இணங்க கோலம் போட்டுக் கொண்டே இருக்கும். நான் உன்னிடம் அதிகமாக ரசிக்கும் செயல் இது தான், நான் அதை ரசித்துக் கொண்டே உன் வார்த்தைகளை எதிர்பார்த்துக் கொண்டே இருப்பேன்.” என்று சொல்லி முடித்தாய்.


ஒரு பெண்ணால் தனக்கு பிடித்த ஆணிடம், தான் ரசித்ததை சுருக்கமாய் அழகாய் இவ்வளவு காதலுடன், வேறு எவ்வாறு விவரிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கே அன்று நான் புதிதாய் தெரிந்தேன். நான் அப்படி எல்லாம் செய்வேனா? என்று என்னையே கேட்டுக் கொண்டு இருந்தேன். (பின்னர் யோசித்துப் பார்த்தேன், ஆம் அப்படி தான் செய்கிறேன் ஒவ்வொரு முறை serious ஆக பேசும் போதும்).


உடனே என்னிடம், நீ “Ok, என்னிடம் எது பிடிக்கும்?” என்றாய். “நீங்க உளறிக் கொட்டினால் நானும் உளறிக் கொட்டணும்னு ஏதும் சட்டம் இருக்கா?” என்று கேலி செய்தேன். உடனே உன் செல்லக் கோபத்தை தணிக்க, “உன் போல் என்னால் ஆழமாய் சிந்திக்க வராது, நான் எனக்கு தோன்றியதை சொல்கிறேன், நீ காட்டும் அக்கறை பிடிக்கும், பால் போன்ற முகம் பிடிக்கும், உன் நடை பிடிக்கும், பல முறை உன்னை மாதிரி நடக்க முயற்சித்து இருக்கிறேன், ஒவ்வொரு முறை நீ அழுவதும் பிடிக்கும், நீ சிரிப்பதையும் ரசிப்பேன், உன் அழகான எழுத்துகளை பிடிக்கும், மிகவும் ரசிப்பேன்.” இப்படியாக நிறைய விஷயங்கள் கூறினேன். எல்லாமே மறந்து போய் விட்டன. கிட்டத் தட்ட 20 25 விஷயங்களை ரசிப்பேன் என்றேன்.


நான் அப்படித்தான் எல்லாவற்றையும் நீட்டி முழக்கி சொன்னால் தான் எனக்கு ஒரு திருப்தி. அனால் நீ ஒரு விஷயமாய் சொன்னாலும், மனதில் ஆழமாய் பதிகின்ற மாதிரி சொல்வாய். இப்போது சொல்கிறேன் காதலி, நாம் காதலித்ததே ஒரு கவிதை போலத் தான் இருக்கிறது, நினைத்துப் பார்க்கையில்.

“என்னை அதிகமாக ரசித்ததும் நீ தான்…
என்னை அதிகமாக ரசிக்க வைத்ததும் நீ தான்..!”

உன் கவிதையை உனக்கே சமர்ப்பிக்கிறேன்.

 

One response to “ரசித்தல்

  1. Riyas Jumeira's avatar

    Riyas Jumeira

    August 15, 2011 at 7:38 AM

    un alumbu thaaangalada…………………………………..

     

Leave a comment